ஜனவரி – மூன்றாவது முள்

புத்தகம் பற்றி

கல்யாண்ஜி என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய 52 கவிதைகள் உள்ளடங்கிய தொகுப்பு.

புத்தகம் பற்றிய பொதுவான குறிப்பும் கூட ஒரு கவிதையாகவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர் முன்னுரையும் கல்யாணி.சி என்ற பெயரில் உள்ளது.

கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம்.
பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்.

மனம் கவர்ந்தவற்றில் சில…

உடைந்து சிதறாமல்
மயிரிழைக் கீறலிட்டிருக்கும்
இந்தமுட்டையைப் போல் இருக்கிறது
உடைந்து சிதறாமல்
மயிரிழைக் கீறலிட்டுக் கொண்டிருக்கும்
இந்த வாழ்வும்.


ஒரு முத்தத்தை அது முத்தம் என்று அறியாமலே இதுவரை எத்தனை முத்தங்கள் கொடுத்துவிட்டேன்.
முத்தம் இது முத்தம் என அறிந்த பின் ஒரு முத்தம் இட்டேன்.
அது முத்தம் போல் இல்லை.
வேறு ஏதோ ஒன்றாக இருந்தது.
ஒரு கேள்வி போல.
ஒருவிடை போல.
ஒரு வரியை எழுதியது போல.
ஒரு வரியை அழித்தது போல.


பேருந்துக்காகக் காத்திருப்பவர் இல்லை.
சிந்தாமணி அக்கா கடை முன் உதிரும்
நாவல் பழம் பொறுக்கக் குனியவில்லை.
நிர்வாணத்திற்கும் அணிதலுக்கும் நடுவில் நின்றது
நெடிய பசி நீத்த உடல்,
தன்னிச்சையாக வளர் மயிரின் தீவிரம்
படர் புழுதிக் கன்னம்.
எச்சில் வழிந்து ஒழுகும் வாயுடன்
தென் திசை பார்த்து ஓயாச் சிரிப்பு.
கடந்தவன் தானே கடவுள் என்பதால்
கும்பிட்டு நானும் கடந்து போனேன்.


ஒரு நொடி கூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச் சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற காலத்துடன் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா குதித்துக் குதித்துச் செல்கிறது அந்த மூன்றாவது முள்.


பழைய சேலை கேட்டு ஒருத்தி வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள் இன்னொரு தடவை வந்தால் தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க இப்போதுதான் அனாதை விடுதிக்குக் கொடுத்தோம் என்று ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும் இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக அசையாமல் இருக்கிறது வாசல் கதவு உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்.


மிகச் சிறியதையெல்லாம் மிகப் பெரியதில்
வைத்தபடி இருந்தேன்
ஒரு நாள் வசப்பட்டது
மிகப் பெரியதை மிகச் சிறியதில் வைப்பது.
எதையும் எதனிலும் வைப்பதில்லை என்றாயிற்று அதன் பின்னர்.


ஆசிரியர் பற்றி

வண்ணதாசன் (கல்யாண்ஜி, சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
– Tamil.wiki

சில குறிப்பிடத்தக்க இணைப்புகள்

  • பொன்மாலைப்பொழுது
  • விஷ்ணுபுரம் விருது ஏற்புரை

  • Documentary on Vannadasan

நன்றி

புத்தகத்தையும், ஆசிரியரையும் அறிமுகப்படுத்திய அருணுக்கு நன்றிகள்!

Leave a Reply