பயணம் – இந்த சொல்லே ஒரு மந்திரம் என தோன்றுகிறது. இதை கேட்டதும் தோன்றும் எண்ணங்கள் : எதிர்பார்ப்பு, தேடல், அறிதல், குதூகலம், நம்பிக்கை, இனம்புரியா அச்சம், தொலைதல் மற்றும் முக்கியமாக தப்பித்தல். எதிலிருந்து? நம்மிடமிருந்தே.
நண்பர்களுடன், குடும்பத்துடன் கொள்ளும் பயணங்கள் வேறு வகை. அவை சிறந்தாலும், பயணத்திற்கான சிறந்த துணை நாம் மட்டுமே. நாம் நம்மை அறிய பயணம் போன்ற உதவி வேறில்லை என நினைக்கிறேன்.
பெரும்பாலான சமயங்களில் நம் வாழ்க்கை முறை, நாம் செய்யும் வேலை, இவையே பயணங்களை தீர்மானிக்கின்றன. ஆனால், கிடைக்கும் எல்லா வாய்ப்பினையும் பயன்படுத்திக்கொள்வதில் மற்றும் அவ்வாறான வாய்ப்பை உருவாக்கி கொள்வதில் முடிந்தவரை தீவிரமாகவே இருந்திருக்கிறேன்.
பயணம் பற்றிய என் தீரா ஆசைகள் அல்லது பேராசைகளுக்கு ஒரு சுவையான தீனியாக மட்டுமல்லாது, என்னை போல பயணத்தை நேசிக்கும், என் போன்ற பலருக்கு இன்னும் ஆசை, ஆலோசனை மற்றும் அறிவினை தரும் ஒரு சக பயணியாக நான் பார்க்கும் முக்கியமானவர்களின் முன்வரிசையில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
தேசாந்திரி என்ற பெயரில் பயணக்கட்டுரை நூல் எழுதியது போதாது என தன் பதிப்பகத்திற்கும் அதன் பெயரையே வைக்கிறார் என்றால் அதற்காகவே அவரை நேசிக்க வேண்டாமா? 🙂
இலக்கற்ற பயணி, எஸ். ராமகிருஷ்ணனின் மற்றுமொரு பயணக்கட்டுரை நூல்.
இந்த நூல் மூலமாக நாம் அறிவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயண இலக்குகள் மட்டுமல்ல. அந்த இலக்குகள் ஒரு சிந்தனையாளனுக்குள் எழுப்பும் எண்ண ஓட்டங்கள், அவை நினைவுறுத்தும் மேலும் பல சிந்தனையாளர்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் குறிப்பிடும் இலக்கு மற்றும் அவர் நினைவு கூரும் புத்தகங்கள், மேற்கோள்கள். இவற்றை தொகுத்து ஒரு பதிவாக இது உள்ளது.
இது எனக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கும் உதவினால், தூண்டினால் மேலும் மகிழ்ச்சி.
சின்னஞ்சிறியதாய் ஒரு உலகம்
சொற்பமேயான நேரம் மட்டும் அளிக்கப்பட்ட சின்னஞ்சிறு வாழ்க்கை.
காமனுக்கு கரும்பு வில்லை உருவாக்கியது கற்பனையின் உச்சம், காமம் எப்போதுமே கரும்புடன் ஒப்பிடப்படுகிறது, அவனது அம்புகள் மலர்கள், ரதியோ கிளியில் ஏறி அமர்ந்தவள், இச்சையை உருவாக்குவது அவளது வேலையாம்
தாமரை, அசோகம், மா, முல்லை மற்றும் குவளை ஆகிய ஐந்து மலர்களையே மன்மதன் தனது அம்பாக எய்கிறானாம், அதுவும் உடலின் எந்த பாகங்களில் அம்பு எய்த வேண்டும் என்றும் குறிப்பிருக்கிறது
தாமரை மலரை வைத்துத் தாக்கும் போது அது மார்பில் பட வேண்டும், அப்போது தான் உன்மத்தமேறும், உதடுகளைத் தாக்குதவற்கு அசோகமரத்தின் பூக்கள் பயன்படுத்தபட வேண்டும், அதனால் ஏக்கம் உருவாகும்
முல்லையால் கண்களைத் தாக்க வேண்டும், அப்போது தான் அது உறங்க விடாமல் ஆசையை அதிகரிக்கும்
மாமரத்தின் பூவைத் தலையில் எய்ய வேண்டும், அது காமத்தை தலையில் கொப்பளிக்க செய்யும், அதனால் மோக்கிறுக்கு ஏறும்
குவளை மலர்களைக் கடைசியாக நாபியை நோக்கி எய்ய வேண்டும், அது விரகதாபத்தை உருவாக்கி ஆசையின் உச்சத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்
ரதி மன்மதசிற்பங்களைச் செய்தவர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்தச் சிற்பி காமத்தின் நுட்பம் அனைத்தையும் அறிந்து கல்லில் வடித்திருக்கிறான், ஒவ்வொரு சிலையும் ஒரு உன்னதம்,
பெரும்பான்மை மன்மதன்கள் ஆசையை அடக்கத் தெரியாமல் அலைபாயும் கண்களுடன் இருக்கிறார்கள், ரதியோ ஆசையற்ற மனது கொண்டவளை போன்ற பாவனையுடன் ஆனால் கண்களின் ஒரத்தில், உதட்டின் சுழிப்பில் ஆசையை உறைய செய்தவர்களாக இருக்கிறார்கள்
மழை பெய்கிறது என்பது எவ்வளவு சிறிய வார்த்தை. ஒவ்வொரு முறை இதன் போதாமையை முழுமையாக உணர்கிறேன்.
ஆறு சிறகுகள் கொண்டது என்பதை மழைக்காலமே நமக்கு உணர்த்துகிறது.
Koraput, Orissa
போண்டா இன மக்கள் பெயர்களுக்கு தனியே ஆன்மா இருப்பதாகக் கருதுகிறார்கள். ஒருவருக்கு பெயரிடுவது என்பதன் வழியாக அந்த ஆன்மா தனக்கான உடலை தேர்வு செய்து கொள்கிறது என நம்புகிறார்கள்.
பழங்குடிகளின் பயிரிடும் பழக்கம் மேம்பாடு கொண்ட ஒரு விவசாய முறை. தாங்கள் பூமியிலிருந்து உண்டானவர்கள் என்பதால் பூமியை ஏர் கொண்டு உழுவது என்பது தாயின் மார்பை அறுப்பது போன்றது. ஆகவே பூமியை உழுது விதைப்பதில்லை என்கிறார்கள் பைகாப் பழங்குடியினர்
பழங்குடியினரின் பாலியல் வழக்குகளைப் பற்றி தனியாக ஒரு நூல் எழுதி தரும்படி ஒரு பதிப்பகம் கேட்டுக் கொண்ட போது, அதை மறுத்த எல்வின் பழங்குடிகளைப் பற்றிய மிகைகதைகளையும், மோசமான சித்தரிப்புகளையும் நாம் பொது ஊடகங்களில் அனுமதிக்கவே கூடாது, பழங்குடிகளை நாம் புரிந்து கொள்ள தவறும்போது இயற்கையின் ஒரு பகுதியை தவறாக அடையாளப்படுத்துகிறோம் என்று தான் பொருள் என்கிறார்
அடுப்படியின் கூரை இற்றுவீழ்ந்து கிடக்கின்றன, கரையான் பற்றிய சுவர்களில் காளான் முளைத்திருக்கின்றன, பசியால் வருந்தி ஒடுங்கிய வயிறு கொண்ட பாணனின் மனைவி மெலிந்த கைகளை கொண்டிருக்கிறாள், அவள் பிறர் அறியாமல் தனது கூர்மையான நகத்தினால் கிள்ளிய குப்பைக்கீரையை உப்பின்றி வேகவைத்து அதை ஊரார் பார்த்துவிட்டால் அவமானமாகிவிடுமே என்று நினைத்து வாசல்கதவை அடைத்து தனது சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் கொடிய பசிய துன்பம் அந்த வீட்டில் நிலவியது என்கிறது இப்பாடல்
நான் சங்க கவிஞர்கள் வாழ்ந்த சுவடுகளைத் தேடிக்காண்பதில் விருப்பமுள்ளவன். வெள்ளிவீதியாரைப் படித்துவிட்டு மதுரையில் எந்த வீதி வெள்ளிவீதி, எங்கே வெள்ளிவீதியார் நடமாடியிருப்பார் என்று தேடி அலைந்திருக்கிறேன். ஆண்டாளின் திருப்பாவையை ஆண்டாள் கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து வாசித்துவிட்டு அந்தவீதிகளில் சுற்றியலைவதில் சுகம் காண்கிறவன் நான்.
கிரேக்க கவிதைகளை உலகின் சிறந்த கவிதைகள் என வாசித்து வியக்கும் நாம் அதே காலகட்டத்தில் கிரேக்க கவிதைகளை விடவும் உன்னதமான கவிதைகளைத் தந்த கபிலரை வியந்து கொண்டாடுவதில்லை.
பிரான் மலை
தமிழ் அறிஞர் ம. ரா. போ. குருசாமி கபிலரின் பாடல்களை மட்டுமே தனித்து தொகுத்து கபிலம் என்றொரு நூலாக வெளியிட்டிருக்கிறார். வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நூலிது.
கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும் அவர் வர்ணிப்பது அற்புதமானது . பேய்களும், துஷ்ட தெய்வங்களும் கூடித்திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்த தோலைப் போன்று அடர்ந்த கரிய இரவில் கள்வர் வருவார்கள். பயமற்ற கண்கள் கொண்ட அவர்கள் கையில் கல்லும், மரத்தையும் துண்டாக்கும் கூர்மையான வாளும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார்கள். இடையில் உடைவாள். கருமையான மேலாடை. சுவரில் ஏற ஒரு நூலேணி கொண்டு வருவார்கள். ஊரைக்காவல் காக்கும் காவலர் கள் தூக்கம் அறியாதவர்கள். அஞ்சாத வீரம் கொண்ட வர்கள். களவு சாஸ்திரம் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்பி ஓட முயலும் கள்வரை அம்புகளால் அடித்து வீழ்த்து வார்கள். யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரை மடக்கிப் பிடிப்பார்கள் என்கிறார்.
மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே.
எல்லா மலைகளும் ஒன்று போல தோன்றினாலும் ஒவ்வொன்றையும் பார்ப்பதற்குத் தனியான அணுகுமுறை வேண்டியிருக்கிறது. கண்பார்வையால் மட்டும் மலையை உள்வாங்கி விட முடியாது. குறிப்பாக இங்குள்ள சமணச்சிற்பங்களுடன் ஒன்றிப்போக அந்த சிற்பங்களின் மீதான தொடர் ஈடுபாடு மிகவும் முக்கியமானது.
தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம். அதன் உள்ளே முடிவில்லாத கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மணலை வாசிக்க தெரிந்த மனிதன் அதை புரிந்து கொள்ள கூடும்
மிகப்பெரிய சந்தோஷங்கள் எல்லாமே விலை கொடுத்து வாங்காமல் கிடைக்ககூடியதே!
கடல் நம் மனதில் நிரம்புவதற்கு அதன் ஊடாகவே வாழ வேண்டும். கடலோடு பேசவும் கடலை நேசிக்கவும் தெரியாதவனை கடல் தன்னுள் அனுமதிப்பதில்லை என்று ஒரு மாலுமியின் குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன்
பின்னிரவு வெளிச்சம் டால்ஸ்டாயின் எழுத்தின் திசையை மாற்றியது. கைவிடப்பட்டவர்களின் துயரினை பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் துவங்கினார்.
…பின்னிரவு காட்சிகள் மிக முக்கியமானவை. சித்தார்த்தனை புத்தனாக்கியது ஒரு பின்னிரவே.
கொடைக்கானல்
தண்ணீர் எப்போதும் வியப்பளிக்ககூடியது. கடலாக இருந்தாலும், அருவியாக இருந்தாலும், ஏர், குளம், ஆறு என்று எந்த வடிவம் கொண்ட போதும் தண்ணீரின் வியப்பு சொல்லால் விளக்க முடியாதது. மலை எதையும் தனக்குள்ளாக அனுமதிப்பதில்லை. அது நம் குரலை தனக்குள் வாங்கிக்கொள்வதில்லை, திரும்ப எதிரொலித்து விடுகிறது. மலையின் அகம் எதையும் உள்வாங்கிக் கொள்ளாதது போலும்.
மேற்கு தொடர்ச்சி மலை
மலை என்பது மாபெரும் நிசப்தம். அது மலர்ந்திருக்கிறது. நிசப்தம் மலரும் தருணம் அற்புதமானது.
தொலைதூர மரங்களில் எவருடைய கையும் படாத காய்களும் கனிகளும் பூக்களும் இருக்ககூடும். அவை மனிதர்களுக்கானதில்லை. அவை தன் விருப்பத்திற்காக உருவாகி அழிந்துவிடுகின்றன.
பிரஸ்கோ ஒவியங்களைக் காண்பது நவீன கவிதையைப் புரிந்து கொள்வதைப் போன்ற ஒன்றே, நேரடியாக, அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது, கவிதை தரும் அனுபவம் போல அதன் குறியீட்டுத் தளமும் சொற்களுக்குள் உள்ள இணைவும் அதன் உள்ளார்ந்த பொருளும், கற்பனையும் ஒவியத்தைக் காண்பதற்கும் முக்கியமானது,
பிரஸ்கோ ஒவியங்களைக் காண்பதற்கு அடிப்படைப் பயிற்சிகள் அவசியமானவை என்றே கருதுகிறேன், இல்லாவிட்டால் அதன் நுட்பங்கள் புரிந்து கொள்ளப்படாமலே கடந்து போய்விடக்கூடும்,
சிம்பொனி இசையில் எப்படி பல்வேறு வாத்தியக்கருவிகள் ஒரே ஒத்திசைவில் ஒன்றாக வாசிக்கப்படுகிறதோ, அது போலவே ஒவியத்திலும் வண்ணங்களும் உருவங்களும் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் ஒன்று சேருகின்றன, விலகிப்போகின்றன, ஆகவே அவற்றை உள்வாங்கிக் கொள்ள பார்வையாளன் ஆழ்ந்து முயற்சிக்க வேண்டும்.
இலக்கிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை இங்கே வாசிப்பிலும் எழுதுவதிலும் அதிக அக்கறைகாட்டுபவர்கள் தமிழகத்திலிருந்து வேலைக்காக சிங்கப்பூர் சென்ற தமிழ் மக்களே. சிங்கப்பூரில் பிறந்த வளர்ந்தவர்களில் அதிகம் எழுத்து, இலக்கியம் என ஆர்வம் காட்டுவதில்லை. அத்தோடு பள்ளிகளில் தமிழ் பயின்ற போதும் வீட்டிலும் மற்ற வகுப்பறைகளிலும், வெளியிலும் ஆங்கிலம் பேசுவதால் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஆங்கிலமே தாய்மொழி போல உள்ளது. இவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உண்டாக்கவும் புதிய படைப்பிலக்கிய முயற்சிகளை ஊக்கப்படுத்த அரசு நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் தேசிய நூலகத்தால் நடத்தபடும் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கம்