சிந்தனை செய் மனமே..


நாம் பிறக்கும்போது அனைவருமே சரியாக சிந்திக்க கூடிய ஆற்றலுடனே பிறக்கிறோம். மரபணுக்கள் வழியாக நமக்குள் ஏராளமான அறிவுத்தொடர்ச்சிகள் புதைந்துள்ளன. நாம் வாழும் காலம், சுற்று சூழலுடன் ஒன்றியமைய வேண்டிய அவசியம் மற்றும் தனித்து செயல்பட தேவையான தீவிர திராணி போதாததாக இருக்கும் காரணத்தினாலேயே அந்த அறிவினை மழுங்கடிக்கும்படியான செயல்களை கையாள்கிறோம், நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு ஒரு நீரோட்டமான வாழ்வில் செல்லும் போது நம் அறிவினை இடரும் ஒவ்வொரு செயலையும் நின்று கவனித்து தர்க்கம் செய்ய நிராகரிக்க மறுக்கும் போது நாம் நமக்கே துரோகம் செய்கிறோம்.

சற்று சிந்தித்து பார்க்கையில், நான் என் வாசிப்பனுபவத்தில் கண்டடைந்த ஒவ்வொரு பெரும் சிந்தனையாளர் அனைவருமே இவ்வாறான “மிக இயல்பான எண்ணங்களை” அவை சராசரிக்கு எவ்வளவு புறம்பாக இருப்பினும், எவ்வளவு எதிர்ப்பு வரினும் அவற்றை புறக்கணித்து தன் கருத்தின்பால் நின்றவர்களே. சாதாரணமாக சொல்ல வேண்டிய உண்மைகளுக்கு கோஷம் தேவையாக இருப்பின், அதன் முரண் மற்றுமே சூழ்நிலையின் அவலத்திற்கான சாட்சி.

நாம் இன்று சிந்தனையில், செயலில், வசதியில் “இருக்கும்” இடம், நாம் சுவீகரித்தவை. பெரும்பாலான நேரங்களில் அவற்றை மறந்தவாறே இருக்கிறோம்.

காலம் மாறிக்கொண்டே இருக்கின்றது. எந்த காலகட்டத்திலும் அடுத்த கட்ட நகர்வுக்கு தேவை, பொறுப்புணர்வு, சரியான சிந்தனை, திடமான நம்பிக்கை. இவையனைத்திற்கும் முன்பாக தர்க்கம் தவிர்த்த நம்பிக்கைகளை களைதல்.

— அழியட்டும் ஆண்மை புத்தகம் வாசிக்கும்போது, வாசித்த பின் எனக்குள் ஓடிய எண்ணங்கள்.

வெறும் மேற்கோள்கள், திணிப்பு மாதிரியான அறிமுகங்கள் தாண்டி நேரடியாக பெரியாரின் சொற்பொழிவுகளை, சில கட்டுரைகளை தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ள ‘அழியட்டும் ஆண்மை’ வாசித்தேன். மொழி நடையின் விலக்கம் முற்றிலுமாக என் வாசிப்பு பழக்கத்தின் பொறுப்பு என்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது.

பெரியாரின் அறிவு ஆழம் மற்றும் அகலம் என்னை பெரும் வியப்புக்குள் ஆழ்த்தியது.

பெரியார்வாதம் என்ற சொல், அரசியல் தவிர்த்து பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல், தேவை உறுதியாக உள்ளது.


Leave a Reply